tamil whatsapp shortcut keys

ஸ்மார்ட் போன் மற்றும் இணையம் பயன்படுத்தும் அனைவரும், உடனடியாக தகவல் அனுப்ப உதவும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த செயலியில் ‘ஒலி அழைப்பு’ மற்றும் ‘காணொளி அழைப்பு’ வசதிகள் வந்த பின்னர், இதை நாள் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளில் பயன்படுத்துவோரே அதிகம்.

பலர் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியினை, ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். மற்றும் பிளாக் பெரி 10 ஆகிய இயக்க முறைமைகளில் பயன்படுத்தலாம்.

வாட்ஸ் அப் செயலியில், சில செயல்பாடுகளை மேற்கொள்ளப் பல சுருக்கு வழிகள் உள்ளன. இவற்றையும் பின்பற்றினால், வாட்ஸ் அப் நமக்கு எளிமையானதாகவும், விரைவில் இயக்கத்தக்கதாகவும் இருக்கும். அவற்றில் சில சுருக்கு வழிகளை இங்கு காணலாம்.

ஹோம் ஸ்கிரீன் ஷார்ட்கட்

வாட்ஸ் அப் மூலம் நாம் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் மற்றும் உறவினர்களில், ஒரு சிலரை நாம் தினந்தோறும் அடிக்கடி தொடர்பு கொள்வோம். அல்லது சில குழுக்களுடன் அடிக்கடி உறவாடுவோம்.

தகவல்களை அனுப்புவோம். இவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு வேளையிலும், வாட்ஸ் அப் செயலியை இயக்கி, குறிப்பிட்டவரின் பெயர் தேடித் தேர்ந்தெடுத்து, பின்னர் Chats / Calls பிரிவைத் தேடி இயக்க வேண்டியதிருக்கும்.

இவ்வளவு வேலைகளையும், ஒரே ஒரு ஷார்ட் கட் இயக்குவதன் மூலம் மேற்கொள்ளலாம். அதாவது, போனின் திரையில், ஒரு ஷார்ட் கட் உருவாக்கி, அதனைத் தட்டுவதன் மூலம், நேரடியாக, அவர்களைத் தொடர்பு கொள்ளும் வாட்ஸ் அப் திரையைப் பெறலாம். இதனைத் தட்டியவுடன், வாட்ஸ் அப் செயலி இயக்கப்பட்டு, குறிப்பிட்டவரைத் தொடர்பு கொள்ளத் தயாரான வகையில் திரை கிடைக்கும்.

நாம் உடனடியாக டெக்ஸ்ட் அல்லது வாய்ஸ் அழைப்பினை மேற்கொள்ளலாம். இதற்கு, வாட்ஸ் அப் இயக்கி, ‘Chats’ மீது தட்டவும். நாம் யாருடன் அடிக்கடி தொடர்பு கொள்ள விரும்புகிறோமோ, அதனைத் தேர்ந்தெடுத்து அதனைச் சிறிது நேரம் அழுத்தவும். உடன் மெனு ஒன்று கிடைக்கும்.

அதில் “Add conversation shortcut” என்பதில் கிளிக் செய்தால், நீங்கள் தேர்ந்தெடுத்தவரின் தொடர்புக்கான படத்துடன் ஒரு சிறிய ஐகான், திரையில் தோன்றும். இதனைத் தட்டினால், நேரடியாக, வாட்ஸ் அப் திறக்கப்பட்டு, அவருக்கான தகவல் விண்டோ தயாராக இருக்கும். அல்லது, அவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, மேலாக வலது புறம் கிடைக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட சிறிய பட்டனில் தட்டவும். இப்போது ஒரு சிறிய பட்டியல் கிடைக்கும்.

இதில், கீழாக உள்ள, More என்பதில் தட்டினால், இன்னொரு மெனு கிடைக்கும். இதில் உள்ள “Add Shortcut” என்பதில் தட்டி, ஷார்ட் கட் ஐகானை ஏற்படுத்தலாம். இந்த ஐகானை நீக்க வேண்டும் எனில், அதன் மீது சிறிது அழுத்தம் கொடுத்தால், திரை சுருங்கி, Remove Icon என்று ஒரு சிறிய படம் காட்டப்படும்.

இதில் கிளிக் செய்தால், அந்த ஐகான் நீக்கப்படும்.

பலருக்கு ஒரே செய்தியைப் பலருக்கு அனுப்ப முடியும். இவ்வாறு அனுப்ப, வாட்ஸ் அப் செயலியின் பக்கத்தில் உள்ள மெனுவில் வலது புறம் மேலாக உள்ள மூன்று புள்ளிகள் அடங்கிய பட்டனில் தட்டவும். கிடைக்கும் மெனுவில், “New broadcast” என்ற பிரிவில் தட்டவும். இதன் பின்னர், யாருக்கெல்லாம் குறிப்பிட்ட தகவலை அனுப்ப வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவர்கள் பெயர்களை இணைக்கவும். பின்னர் “Create” என்பதில் தட்டவும். இறுதியாக, நீங்கள் அனுப்ப விரும்பும் தகவலை டைப் செய்து தட்டவும். இதனைத் தொடர்ந்து, பட்டியலில் இணைத்த அனைத்து நண்பர்களுக்கும், அந்த செய்தி அனுப்பப்படும்.

இறுதியாகப் பார்த்ததை மறைக்க

தனிநபர் ரகசியம் என்பதை நாம் அனைவரும் கடைப்பிடிக்க விரும்புவோம். இதனால் தான், நாம் இறுதியாக வாட்ஸ் அப் மூலம் யாரிடம் பேசினோம், யாருக்குத் தகவல் அனுப்பினோம் என மற்றவர்கள் பார்ப்பதை விரும்புவதில்லை. இந்த அமைப்பினை ஏற்படுத்த, வாட்ஸ் அப் பிரிவில் கிடைக்கும் மெனுவில், Option என்பதில் தட்டவும். பின்னர், Settings->Accounts->Privacy எனச் செல்லவும். இங்கு Last Seen, Status and Profile photo என்ற ஆப்ஷனில், “Nobody” அல்லது “My Contacts” என்பதில் தட்டினால், நீங்கள் விரும்பியபடி, உங்களின் தனிப்பட்ட தகவல்கள் வேறு யாருக்கும் காட்டப்பட மாட்டாது.

குழு அரட்டையை முடக்கி வைக்க

வாட்ஸ் அப் செயலியில், நாம் ஒவ்வொருவரும் பல குழுக்களில் இடம் பெற்றிருப்போம். சிலர் தாங்களாக விருப்பத்துடன் இணைந்திருப்பார்கள். சிலர் சில குழுக்களில் மற்றவர்களால் இணைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், இந்தக் குழுக்களில் ஒரு சில உறுப்பினர்கள் பதியும் தகவல்கள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அல்லது அவர்கள் அனுப்பும் எரிச்சல் ஊட்டும் தகவல்களால், அவர்களை அனைவருக்குமே பிடிக்காமல் இருக்கலாம்.

இதற்குத் தீர்வாகக் குறிப்பிட்ட குழுவிலிருந்து வரும் தகவல்களை, நீங்கள் மட்டும் காணாமல் இருக்கும் வகையில் முடக்கி வைக்கலாம். இதற்கு வாட்ஸ் அப் செயலியை இயக்கி, Chats டேப்பில் தட்டவும். பின்னர், குறிப்பிட்ட அந்த குழுவினைத் தேர்ந்தெடுக்கவும். அந்த குழு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், Options->Mute எனச் செல்லவும். அதன் பின்னர், எவ்வளவு நாட்கள் அதனைத் தற்காலிகமாக முடக்கி வைக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து தேர்ந்தெடுக்கவும்.

இதில் மூன்று கால அளவுகள் தரப்படும். அவை 8 Hours / One Week / One year என இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் கால அளவினை அமைக்கலாம். ஓராண்டு என தேர்ந்தெடுத்தாலும், பின்னர், நீங்கள் அதற்கு முன்னரே குழுவின் தகவல்களைப் பெற விரும்பினால், மீண்டும் Unmute செய்து இயக்கிக் கொள்ளலாம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *