ஆதி தொட்டு மனிதர்களால் மனிதர்கள் மீதான வன்மம் தொடர்ந்து கொண்டே வருவது போலத்தான், வன்மத்தை ஏவும் வழிகளும்  பரிணாமமடைந்து கொண்டு வருகிறது. சமகாலத்தில் அதன் புதிய வடிவம் “வாட்ஸ் அப்” எனப்படும், அலைபேசி அப்ளிகேஷன் ஆகும்.

pengal methana vanmam

சமூகம் எனும் கட்டமைப்பு அறிவியல் வளர்ச்சிகளைக் கொண்டு முன்னேற்றங்களை வளர்த்துக்கொள்கிற அதே வேளையில், அதன் அத்தனை குரூரங்களையும் வளர்த்துக்கொண்டேதான் இருக்கிறது, என்பதுதான் இதில் சிக்கலான விடயம். அதிலும் முக்கியமாக இந்த குரூர வன்மங்கள் எப்போதும் ஆயிரம் கசைகள் கொண்டு முழுக்க முழுக்க பெண்னை, பெண் உடலைத்தான் குறிபார்த்து வீசப்படுகின்றன என்பதும் மறுக்கவியலாத உண்மை.

சம்பவம் 1

மாநிலத்தின் எதோ ஒரு மூலையில் சமூகத்தின் வரையறைகளுக்கு  பொருந்தாத இரு உள்ளங்களின் காதல், அவர்களின் தீர்வை அடையும் அதேவேளையில் அவர்களின் முடிவைக்குறித்து அத்தனை மக்களுக்கும் வாட்ஸ் அப்பில் சேதி காட்டுத்தீயாக பரவுகிறது. பிறகு அவர்களின் படங்களோ, அல்லது அவர்கள் எனச்சொல்லி அவர்களல்லாத வேறு யவரோ இருவரின் படங்களோ அந்தரங்க காட்சிகளுடன் அனவரது அலைபேசியிலும்
பெறப்படுகிறது. குறிப்பாக அந்த ஆண் தவிர்த்து பெண்ணின் உடலைக்காட்டும் படங்களே பெரும்பாலும் பெறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அந்தக்காதலைக் குறித்து மக்களால் சமூக வலைதளங்களில் கருத்துப்பறிமாற்றங்கள் நிகழ்த்தப்படுகிறது. நகைச்சுவை படங்கள் (மிமீ) தயார் செய்யப்படுகிறது.. அதுவும் பரவச்செய்யப்படுகிறது.. சமூகம் இச்சம்பவத்தை வைத்து சில பொழுதுகளை இனிதே கழிக்கின்றன. மேலும் மேலும் பரவப்பரவ கருத்துப்பரிமாற்றங்கள் சுழற்சியாக தொடர்கிறது.

சம்பவம் 2

ஒரு பெண் எட்டுமாதமாக ஒருவனை காதலித்துக்கொண்டே இடையில் இன்னொரு இளைஞனுடனும் பழகி வந்திருக்கிறாள், ஒரு கட்டத்தில் தனக்கு தோதானவன் இரண்டாமவன் என முடிவு செய்து, முதலாமானவனை தவிர்க்கப்பார்த்திருக்கிறாள். இப்போது அந்த இரண்டு இளைஞர்களும் அறிமுகமாகி அவளைப்பற்றித் தெரிந்துகொண்டு அந்தப்பெண்ணிடம் அலைபேசி.. ஆடியோவை பதிவு செய்கிறார்கள்..

மேலும் மேலும் தகாத வார்த்தைகளைப்பேசி, அவளை பரத்தையருடன் ஒப்பீட்டு அவமானப்படுத்துகிறார்கள்.. மேலும் இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீட்டில் காட்டி அவளை அவமானப்படுத்தப்போவாதாக மிரட்டுகிறார்கள்.. பிறகு அந்த ஆடியோவையும், அந்தப்பெண்ணின் புகப்படங்களையும் வாட்ஸ் அப்பில் பரப்பிவிடுகிறார்கள். இந்த சம்பவமும் அந்தப்பெண் பற்றிய பல்வேறு மதிப்பீடும், மாநிலம் முழுதும் சமூக
வலைதளங்களில் பேசு பொருளாகிறது, விவாதமாகிறது, நகைச்சுவையாகிறது, மக்களின் பொழுதுகள் இனிதே கழிகிறது.

சம்பவம் 3

காதலை முறித்துக்கொண்டு, அடுத்த காதலுக்கு போய்விட்ட பெண்ணின் புகைப்படமும், அவளின் அலைபேசி எண்ணும் மாவட்டத்தின் சிறந்த பரத்தை, என வாட்ஸ் அப்பில் முன்னாள் காதலனால் பரவச்செய்யப்படுகிறது.

இந்த மூன்று சம்பவங்களில் இரண்டு பெண்கள் எக்ஸ்ட்ரீமானவர்களாக இருக்கிறார்கள்..  அவர்களின் நடத்தையும் சரியில்லை, எனவே அவர்கள் கேலிக்குரியதாவதில், எந்தத்தவறும் இல்லை என்பதுதான் சமூகத்தில் பெரும்பாலனவர்களின், பொதுப்புத்தியால் வைக்கப்படுகிற பதிலானதாக இருக்கிறது.

விகிதாசாரமாகவே எடுத்துக்கொண்டாலும், இந்த எக்ஸ்ட்ரீம் வகையில் ஆண் வர்கம்தான் அதிகமானதாக இருக்கும். இதே
போல ஒரு ஆணை கேலிக்குரிய பேசு பொருளாக ஆக்கிவிடமுடியுமா? என்றால் முடியும். ஆனால் அந்த ஆண் பிரபலமாக இருந்தால் அல்லது சமூகத்தின் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தால் மட்டுமே அது முடியும்.

அதைவிடுத்து எந்தவொரு சாமானிய ஆணையும் இதுபோன்ற சம்பவங்களினால் எதுவும் செய்துவிட முடியாது. இதுவே பெண்கள் என்றால் அதன் கணக்கே வேறு, பிரபலமாக இருந்தாலும் சரி சாமானியப் பெண்ணாக இருந்தாலும்சரி அசிங்கப்படுத்தி பரவச்செய்ய அவள் பெண்ணாக இருக்கும் ஒரு தகுதி போதுமானதாக இருக்கிறது.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் ஒருவார காலத்திற்க்குள் பரவியவை.. இந்தநிலை இப்படியே தொடர்ந்து கொண்டே இருக்குமெனில், எதிர்காலத்தில் பெண்கள் பரஸ்பர புரிதல் இல்லாமல் தன் எதிர் இனத்தோடு கொண்ட உறவுகளை முறிக்க நினைத்தாலோ, முறித்தாலோ, அந்தந்த ஆண்களின் வன்மங்கள் வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களால் தொடர்ந்து தீர்க்கப்படும். என்பதுதான் இங்கே பெருங்கவலையையும் கவனத்தையும் கொள்ள வைக்கிறது.

ஸ்மார்ட்போன் யுகத்திலும்  ஆதிக்கப்போக்கில் பெண்களை அடக்கியாள முற்படும் வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களில், தணிக்கையோடு கூடிய சட்ட வரைமுறைகளும், பெண்களின் மீதான வன்மங்களைப் பரப்புவோருக்கு தண்டனைகளைப் பெற்றுத்தர சட்டரீதியிலான பாதுகாப்பும் வேண்டும் என்பது எதிர்கால பெண்ணினத்தின் மிக அத்தியாவசியமான அம்சம் ஆகும்.

இன்றும் தனக்குப் பிடிக்காத, தன்னைப்பிடிக்காத பெண்களைப்பற்றி வக்கிரமாக எழுதிவைக்கும் மனிதர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.. ஆனால் பொதுக்கழிப்பறை சுவர்தான் ஸ்மார்ட் அப்களாக பரிமாணம் அடைந்துவிட்டன.. ஆகவே முன்னைவிட இன்னும் கூடுதல்  கவனத்துடன் இருங்கள் பெண்களே.. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லா சமூகமும், ஸ்மார்ட்டானதல்ல.

நன்றி: http://www.tamilpaper.net/

Tags: Tamil Tech News, Samartphone Dangerous, Smartphone Resentment.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *