![]() |
சமூக சீர்கேடு |
அறிவியல் என்றாலே அதில் நன்மை தீமை என்ற இருவேறு துருவங்களும் உண்டு. அறிவியலின் புதிய தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் விளையும் நன்மைகளை விட தீமைகளே ஏராளம்.
இணையம் சார்ந்த தொழில்நுட்பத்தை இவ்வாறு குறிப்பிடலாம். இரு பக்கமும் கூரான முனைகொண்ட ஆயுதம் போன்றது இது .
இந்த ஆயுதத்தை நாம் பயன்படுத்தும்போது கவனமாக… மிக கவனமாக பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அது நம்மையே பதம் பார்த்துவிடும்.
தற்போது உள்ள சூழலில் அறிவியல் சாதனங்கள் எதற்காக படைக்கப்பட்டனவோ, அதற்காக அன்றி வேறு பல தீய காரியங்களுக்கும் பயன்படுத்துவது வேதனையளிக்க கூடிய விடயம். பொதுவாக அறிவியல் கண்டுபிடிப்புகளை மனிதர்கள் இவ்வாறு தவறாக பயன்படுத்த கற்றுக்கொண்டுவிட்டனர்.
இணையத்தில் எடுத்துக்கொண்டோமானால் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நடந்தேறும் அவலங்களைச் சொல்லலாம். இத்தளம் ஏற்படுத்தப்பட்ட நோக்கமே, பல்வேறு திசைகளில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாடுகளில் பிரிந்து இருக்கும் நண்பர்கள், குடும்ப நபர்கள் தங்களது எண்ணங்களை பகிர்ந்துகொள்வதற்காகத்தான்.
ஆனால் மனித மனத்தின் வக்கிரப்புத்தி இதுபோன்ற சமூக தளங்களையும் விட்டுவைக்கவில்லை.. தற்போது பேஸ்புக் என்றாலே அது பலான செய்திகளை பகிர்ந்துகொள்வதற்காகவே என்பது போன்ற தோற்றத்தை சமூக விரோதிகள் ஏற்படுத்திவிட்டனர்.
இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்திற்கு நல்லது செய்கிறார்களோ இல்லையோ சக மனிதர்களுக்கு தீமையை செய்வதில் இவர்கள் தவறுவதில்லை…
உதாரணமாக கையடக்க தொலைபேசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்…
எங்கு சென்றாலும் நம்முடன் எடுத்துச்சென்று, வேண்டிய நேரங்களில் விரும்பிய நபர்களுடன் பேசிக்கொள்ள உருவாக்கப்பட்டதுதான் கையடக்க தொலைப்பேசிகள்.
சில வருடங்களில் அத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு, தற்போது ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் என மாற்றம் பெற்று தனது வளர்ச்சியை மேன்படுத்திக்கொண்டுள்ளன கையடக்க தொலைப்பேசிகள்…
கூடுதல் வசதிகள் அடங்கிய இத்தகைய கைப்பேசிகள் பேசுவதற்கு மட்டுமல்ல… படம் எடுக்க, பாடல் கேட்க… விளையாட என மேலதிக வசதிகளையும் பெற்றுள்ளது.
ஆனால் ஒரு சிலர் இவ்வகையான கைப்பேசிகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். தேவையில்லாமல் பொது இடங்களில் பெண்களை அவர்கள் அனுமதி பெறாமலேயே படமெடுப்பதும், அவர்களின் ஆடைகள் விலகிய நேரத்தில் அவர்களுக்குத் தெரியாமலே படங்களை எடுத்து அதை இணையத்தில் வெளியிடுவதும் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது….
கூடுதலாக இதையும் சொல்லியே ஆகவேண்டும்.
ஒரு பெரிய ஹோட்டல்.. அல்லது ஜவுளி ஸ்டோர், அல்லது நகை கடைகள் இதுபோன்ற முக்கியமான மக்கள் கூடம் இடங்களில் திருட்டுகளைத் தடுக்கவும், கண்காணிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள்(webcam) வைத்திருக்கிறார்கள்.. இது ஒரு பயன்மிக்க தொழில்நுட்பம்.
ஆனால் இந்த வசதியை ஒரு சிலர் வக்கிர எண்ணம்கொண்டு, தவறாக பயன்படுத்தி, அதில் குரூர மகிழ்ச்சி அடைகிறார்கள்..
பெண்கள் ஆடைமாற்றும் இடங்களில் காமிராவை மறைவான இடங்களில் வைத்து, அவர்களை படம் எடுப்பது.. அவற்றை இணையத்தில் வெளியிட்டு குரூர மகிழ்ச்சி அடைவது..
மற்றுமொரு வகையான கூட்டமும் இருக்கிறது.
இவ்வாறு அவர்களுக்குத் தெரியாமல் கழிப்பறையிலோ அல்லது ஆடைமாற்றும் இடங்களிலோ எடுத்த படங்களை வைத்து அவர்களிடம தவறாக நடக்க முயற்சிப்பது…
மிரட்டி பணம் பறிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளும் இருக்கவே செய்கிறார்கள். இதுபோன்ற செய்திகளை நாளிதழ்களில் நாம் வாசிக்கவும் செய்கிறோம்.
இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன?
- எச்சரிக்கையாக இருப்பதைத் தவிர வேறொன்று வழிகள் இல்லை.. செல்லும் இடங்களில் இதுபோன்ற கேமராக்கள் எங்கேனும் வைத்திருக்கிறார்களா என்பதை ஒரு முறை சுற்றி நோட்டம் விட்டு, பிறகு அந்த இடத்தைப் பயன்படுத்தலாம்.
- பெண்கள் ஆடைகள் விலகாதவாறு பின்னிட்டு, பாதுகாப்பான அடைகளை அணியலாம்.
- உடலை காட்டுவதைப் போன்ற மிக இலேசான ஆடைகளை அணிவதை முற்றிலும் தவிர்த்துவிடலாம்.
- புதிய தங்கும் விடுதிகள், ஜவுளி ஸ்டோர்களில் ஆடை மாற்றும் அறைகளை, பாதுகாப்பற்ற கழிப்பறைகள் இவற்றைத் தவிர்த்துவிடலாம்.
- இதுபோன்ற சமூக விரோதிகளை, வக்கிரப் புத்திக்காரர்களை கண்டால், அவர்களைப் பற்றி அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
- நிறைய பேர் விளைவுகளுக்கு பயந்து, நமக்கேன் வம்பு என இதை அப்படியே விட்டுவிடுவார்கள்.
- இதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய தவறு.
- இவ்வாறு விட்டுவிடுவதால், இதையே ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சமூகவிரோத கும்பல்கள், வக்கிர எண்ணம் கொண்டவர்கள் இதை ஒரு தொழிலாகவே வைத்துக்கொண்டுள்ளனர்.
ஒரு மோசமான நிகழ்வுக்கு உடனடி எதிர்ப்பு தெரிவித்து, அதை தட்டிக்கேட்டால் ஒழிய இதுபோன்ற சம்பவங்களை நிறுத்த முடியாது.